மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கரோனாவின்போது பல மாணவர்கள் குடும்ப சூழல் காரணமாக வேலைக்குச் செல்லும் சூழல் உருவாகியது. இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஆசிரியர்கள் வட்டார வள ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி மேலாண்மை குழு ஆகியவற்றின் மூலம் பள்ளி செல்லும் வயதுடைய இடைநின்ற குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதையும் நடப்பு கல்வி ஆண்டில் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இது தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் கணக்கெடுப்புகளுக்கு இடையே மிகப் பெரும் வேறுபாடுகள் உள்ளன.
ஆகவே மத்திய அரசின் வழிகாட்டலின்படி பள்ளி செல்லாமல் மற்றும் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் நடத்தி, பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி தலைமையிலான அமர்வு, "குழந்தை தொழிலாளர்களை மீட்கும் வேளை குடும்பமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குழந்தைகள் இடைநிற்றல் என்பது மிகப்பெரும் பிரச்சனை.
தமிழ்நாடு, கேரளா கல்வியறிவில் சிறந்து விளங்குகிறது. இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனை. தமிழ்நாடு அரசு இடைநிற்றலை கவனத்தில் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து, தற்போதைய நிலவரப்படி பள்ளி இடைநின்ற குழந்தைகளின் புள்ளி விவரங்கள் தொடர்பாகவும் அதனைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் மனுதாரர் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு!