மதுரை: சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னையில் ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு மையம் வேண்டும் என்றும், தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்களை கோவிட் காலத்தில் 700 கிலோ மீட்டர் கொச்சி வரை அலைய விடுவது சரியல்ல என்றும் தான் நவம்பர் 5, 2021ஆம் தேதியன்று ஒன்றிய சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
அக்கடிதத்திற்கு பதிலாக நவம்பர் 17, 2021ஆம் தேதியன்று அமைச்சர் அளித்துள்ள கடிதத்தில், இன்றைய வித்தியாசமான கோவிட் சூழலில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு, ஆகையால் அம்முடிவை ஏற்கவேண்டும் என்று பதில் அளித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
சென்னையில் ஏன் புறப்பாடு மையம் இல்லை?
அமைச்சரின் இந்த பதிலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி, ‘எந்த கோவிட்டை நான் காரணமாக சொல்லி அலையவிடாதீர்கள் என்கிறேனோ, அதையே காரணமாக சொல்லி சென்னைக்கு புறப்பாடு மையம் மறுக்கப்பட்டுள்ளது’ எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவின் மிக முக்கியமான நகரங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய அனைத்தும் புறப்பாடு மையங்களின் பட்டியலில் உள்ள போது இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் சென்னையில் புறப்பாடு மையம் ஏன் இல்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் கடிதம்
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் நவம்பர் 11, 2021ஆம் தேதி ஒன்றிய சிறுபான்மைத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கேரளா, கர்நாடகா மாநில ஹஜ் பயணிகள் என பலரும் சென்னையை புறப்பாடு மையமாக அமைக்கக் கோரி கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதை சு.வெங்கடேசன் எம்.பி தனது செய்தி குறிப்பில் நினைவு கூர்ந்துள்ளார்.
டி.ஆர். பாலு கேள்வி
முதலமைச்சரின் கடிதம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது முதலமைச்சரின் கடிதம் வரவில்லை என்று அமைச்சர் நக்வி பதிலளித்துள்ளார். இது பற்றி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஹஜ் யாத்திரை பிரச்சனையை கண்டுகொள்ளாமல் ’முதலமைச்சரின் கடிதம் வரவில்லை’ எனக் குதுகலமாக பதிவிட்டுள்ளதை சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்ணாமலைக்கு பதில்
அண்ணாமலையின் இப்பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், 'அண்ணாமலை அவர்களே! முதல்வர் கடிதம் பிரதமருக்கு முகவரி இடப்பட்டு இருப்பதை, “எனது அமைச்சகத்துக்கு கடிதம் வரவில்லை " என்று அமைச்சர் மக்களவையில் சொன்ன பதில் தார்மீக ரீதியாக ஏற்புடைய பதில் அல்ல எனவும் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு முரண்பட்டது என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடிதம் எழுதப்பட்டு 20 நாட்கள் ஆகியும் பிரதமர் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு பிரச்சனை கொண்டு செல்லப்படவில்லை என்றால் கேள்வி எழுப்பப்பட வேண்டியது பிரதமர் அலுவலகம் நோக்கித்தானே தவிர, முதலமைச்சர் அலுவலகம் நோக்கியல்ல என்றும் குறிப்பிட்டுள்ளர்.
பலர் கூறியும் கோரிக்கை நிராகரிப்பு
சென்னையில் புறப்பாடு மையம் வேண்டுமென்ற கோரிக்கையை, தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் தெரிவித்துள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன், திமுகவின் நாடாளுமன்றக்குழுவின் தலைவர் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்டவர்களை கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறி தங்களின் கோரிக்கையை அமைச்சர் நிராகரித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, சென்னையில் ஹஜ் பயண புறப்பாடு மையம் இல்லை என்ற முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக தனது அறிக்கையில் சு.வெங்கடேசன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'இட ஒதுக்கீட்டு காலி இடங்களை ஒன்றிய அரசு கவனமாகத் தவிர்ப்பது ஏன்?'