மதுரை சின்னச்சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "சிறையில் உள்ள கைதிகள் உளவியல் ரீதியாக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். சென்னை மனநல அமைப்பு மட்டுமே சிறைவாசிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி, மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று (நவம்பர் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவில் நாளுக்கு நாள் மனவியல், உளவியல் பிரச்னைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் விழுக்காடு அதிகரித்துள்ளன. ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்தால், மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள், ஆய்வுகள் தெரிவித்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு:
1) உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி இந்திய மக்கள் தொகையில் ஏழு பேரில் ஒருவர், உளவியல், மனவியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உண்மையா?
2) இந்திய மக்கள் தொகையில் மனம், உளவியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஏதும் கள ஆய்வு மேற்கொண்டுள்ளதா? அவ்வாறு கள ஆய்வு மேற்கொண்டிருந்தால் கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது?
3) இந்திய மக்கள் தொகையில் அதிகமானோர் பாதிக்கப்படும் உளவியல் பிரச்னை என்ன?
4) இந்தியாவில் போதுமான அளவு மனநல மருத்துவமனைகள் உள்ளதா? ஒவ்வொரு மாவட்ட அளவிலும் அல்லது மண்டல அளவிலும் மனநல மருத்துவமனைகளை மத்திய, மாநில அரசுகள் ஏன் தொடங்கவில்லை?
5) உளவியல் பிரச்னைகள் குறித்து கற்பிக்கும் கல்வி நிறுவனங்களை ஏன் அதிகரிக்கக் கூடாது?
6) மனநலம் தொடர்பான மத்திய அரசின் முதன்மை நிறுவனமான NIMHANS (National Institute of Mental Health and Neurosciences) பெங்களூருவில் உள்ளது? இதே போல் இந்தியாவில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய மண்டலங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7) மனநலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும், அது தொடர்பான மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளதா?
8) இந்தியாவில் தேவைப்படும் மனநல உளவியல் மருத்துவர்கள் எத்தனை பேர்?
9) இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஒவ்வொரு மாவட்ட அளவிலும், தாலுக்கா அளவிலும் மனநல மருத்துவரை நியமிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
10) அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மனநலம் தொடர்பான பாடங்களை கற்பிக்க வெளிநாட்டு உளவியல் நிபுணர்களை பயன்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
11) மனநல 'மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகளின் நிலை என்ன?
12) மனநலம், உளவியலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காப்பீடு குறித்து அரசின் நிலை என்ன?
13 ) பள்ளிகளில் மனநலம் உளவியல் தொடர்பாக, மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மேம்படுத்தவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.