மதுரை: தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மே 23) தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்தளவு எனது முன்னோர்களால், அடையாளம் தெரியாத நாடுகளில் கல்வி, உழைப்பு ஆகியவற்றால் முன்னேறினேன் என சுயமரியாதை கொள்கிறேனோ, அதைவிட முக்கியமானதாக கருதுவது எனது பாரம்பரியத்தால் பெற்ற பாடம்,& தெளிவு - பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் தற்காலிகம்.
குணம், கொள்கை, சமூக பற்றுதான் மனிதனின் அடையாளமும், அழகும்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அத்துடன் அவர் வெளியிட்டுள்ள ஒரு காணொலியில், தனது தந்தையார் அரசியலில் கடைப்பிடித்த நேர்மை, அவர் பணியாற்றிய முறை போன்ற அசாத்திய குணத்திற்குச் சான்று, அவரது இறுதி ஊர்வலத்தின்போது வீட்டிலிருந்து தத்தனேரி இடுகாடு வரை சுமார் 2 லட்சம் பொதுமக்கள் திரண்டு இருந்து அஞ்சலி செலுத்திய நிகழ்வுதான். அதுதான் தனக்கு வாழ்க்கையில் கிடைத்த பாடமாகவும் திருப்புமுனையாகவும் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தனக்கு கிடைத்த பணம், பதவி, புகழ், கல்வி இவை அனைத்தும் இரண்டாம் பட்சமே. ஆனால், ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் குறிப்பாக, தனது தந்தையாரின் மகனாக இன்று ஆற்றுகின்ற அரசியலையே தான் பெரிதாக கருதுகிறேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
'பதவி வரும்; போகும். ஆனால், மக்களின் அன்பும் பாசமும் தான் நிலையான சொத்து என்பதை எனது தந்தையார் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அந்த வகையில், நானும் அவரை அடியொற்றி வாழ விரும்புகிறேன்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாநில அரசுடன் மத்திய அரசு முரண்படுகிறது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்