மதுரை: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மதுரை மற்றும் ராமநாதபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அசன் பாட்ஷா, அபிபுல்லா உள்ளிட்ட 9 பேர் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசை மிரட்டும் விதமாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், இனி மேல் இது போன்று அவதூறாக பேச மாட்டோம் என மனுதாரர்கள் தனித்தனியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் இன்று நீதிபதி முரளிசங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீன் கோரிய அனைவரும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மட்டுமே என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவதூறாக பேசியவர்களுக்கு, மனுதாரர்கள் ஆதரவளித்துள்ளனர்- எனவே, இதுபோன்ற மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தன்பாலின சேர்க்கைக்கு மறுத்த நண்பனை கொன்ற வழக்கு: இளைஞரை விடுதலை செய்து தீர்ப்பு