கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிக்கைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "1978ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 13 தொகுதி கல்லூரிகள், 593 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக 2018ஆம் ஆண்டு முதல் சூரப்பா இருந்து வருகிறார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக இணை இயக்குநர் சக்திநாதன், துணைவேந்தர் சூரப்பா மீது இணையதளம் மூலமாக முதலமைச்சர் செல்லுக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ. 200 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட 13 தொகுதி கல்லூரிகளில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் தலா 13 முதல் 15 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணைவேந்தர் சூரப்பா தனது மகளுக்கு சட்டவிரோதமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவித்தார். புகார்தாரர் கொடுத்துள்ள முகவரி, தொலைபேசி எண் ஆகிய அனைத்தும் போலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் மகள் பகுதிநேர பேராசிரியையாக (Guest Lecturer) பணிபுரிகிறார். இந்த புகாரில் உண்மை தன்மை இல்லை. இந்நிலையில், துணைவேந்தர் சூரப்பா மீது உள்ள புகாரை விசாரணை செய்வதற்காக உயர்கல்வித்துறை தலைமைச் செயலர் நவம்பர் 11ஆம் தேதி அரசாணை வெளியிட்டனர்.
இந்த அரசாணையின் மூலம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை ஆணையம் நியமித்து விசாரணை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. துணைவேந்தரை விசாரணை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. உயர் அலுவலர் மீது புகார் கொடுக்கப்பட்டால் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் உயர்கல்வித்துறை தலைமைச் செயலர் அரசாணை வெளியிட்டு துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே, சூரப்பா மீது விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து, உயர்கல்வித்துறை தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்படப்பட்டுள்ளது.