மதுரை: மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஓலிம்பஸ் கிரானைட் நிறுவனம், நாகராஜன், துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது 2013ஆம் ஆண்டு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் கீழவளவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், மத்திய அமலாக்கத் துறை, பண மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக நேரில் முன்னிலையாக, வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என துரை தயாநிதி, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நேரில் முன்னிலையாக வேண்டும் என்று மதுரை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த வழக்கை நாள்தோறும் விசாரித்து, விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: SaveLIFE: சாணி பவுடர் தயாரிப்புத்தடை செய்ய தொழில் துறையுடன் இணைந்து நடவடிக்கை - மா.சுப்பிரமணியன்