மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியை அடுத்த புள்ளநேரி கிராமத்தில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொன்று புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன், "கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பெண் சிசுக்கொலை சம்பவங்கள், மீண்டும் தலை தூக்கியிருப்பது மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் ஓயாத பரப்புரைகளின் மூலமாக மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும். இன்று மாவட்டத்திற்கு ஒரு குழந்தைகள் நலக்குழு இயங்கி வருகிறது. அதுபோக குழந்தைகள் நலன் சார்ந்த பல்வேறு கண்காணிப்பு அமைப்புகள் அரசின் சார்பாக இயங்கிவருகின்றன.
அதையும் மீறி பெண் சிசுக் கொலை நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுத் துறை அமைப்புகளும் அலுவலர்களும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். பள்ளிப் பருவத்திலிருந்தே மனித உரிமையை பாடமாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சிக் காலங்களில் செயல்படுத்திகாட்டினோம். ஆனால் பிறகு வந்த ஆட்சியாளர்களால் அதனைத் தொடர முடியவில்லை.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தொட்டில் குழந்தைத் திட்டம் பெண்சிசுக் கொலையை பெருமளவு தடுத்தது. தற்போது அத்திட்டம் முடக்கப்பட்டுள்ளது. அதே போன்று குழந்தைகளை தத்தெடுக்கும் வழிமுறைகளை அரசாங்கம் எளிமைப்படுத்த வேண்டும். அது குறித்த பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். ஒருபுறம் குழந்தை பாக்கியம் இல்லாத பெற்றோர். மறுபுறம் வறுமையின் காரணமாக பெண் சிசுவை கொலை செய்கின்ற நிலை. இதனை சரியாக ஆய்வு செய்து அரசுத் துறைகள் நிரந்தரமான தீர்வு காண வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்! பெற்றோரின் கொலைவெறி!