மதுரை மாவட்டம், திருப்பாலை பேச்சிகுளம் பகுதியில் வசித்து வருபவர்கள் அமுதா, முத்து மீனா, தவமணி என்ற மூன்று செவிலிய சகோதரிகள் ஆவர்.
இவர்கள் மூவரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், மூவரும் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதால், வீட்டிற்குச் செல்லாமல் தொடர்ந்து மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதையடுத்து அமுதா, முத்து மீனா, தவமணி ஆகியோர் 14 நாள்களுக்குப் பிறகு இன்று (ஜூன் 21) வீடு திரும்பினர். பின்னர் வீடு திரும்பிய மூன்று செவிலிய சகோதரிகளையும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மலர்களைத் தூவி, பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "எங்களது தாயும் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தவர். சமூக சேவையாற்ற தாயின் வழியிலேயே செவிலியராகப் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பத்தினால், இந்தப் பணியை தேர்ந்தெடுத்துள்ளோம்.
பொதுமக்கள் எங்களின் சேவைக்கு மதிப்பளித்து வரவேற்றது, எங்களை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது" எனத்தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பொதுமக்கள் நன்மை பெறஅண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை!