மதுரை கீழ வெளி வீதியைச்சேர்ந்தவர் சிக்கந்தர் சேக் அப்துல்லா. இவருக்கு ஆடு, மாடுகளை வளர்ப்பதில் ஆர்வம். ஆனால், அவரது வீட்டின் அருகே போதிய இடவசதி இல்லாத நிலையில், வைகை ஆற்றின் தென்கரைப்பகுதியில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல்லா வளர்த்து வந்த 7 மாத கன்றுக்குட்டி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது கண்டு, அதிர்ச்சியடைந்து இது குறித்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார்.
அப்போது நெல்பேட்டை பகுதியைச்சேர்ந்த காதர் சுல்தான்(65) என்பவர் கன்றுக்குட்டியை அடித்துக்கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அப்துல்லா வளர்த்துவரும் கன்றுக்குட்டி, காதர் வளர்க்கும் பசு மாட்டிடம் தினசரி வந்து பால் குடித்து விட்டுச்சென்றதால் கொலை செய்ததாகவும், இதுகுறித்துப்பேசினால் உன்னையும் கன்றுகுட்டியை அடித்துக் கொன்றதுபோல, கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து சேக் அப்துல்லா விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காதர் சுல்தானை இன்று (ஆக.24) கைது செய்தனர்.
இதையும் படிங்க: வீட்டு உரிமையாளர்களே உஷார்... ராணுவ அலுவலர்கள் போல் பேசி மோசடி