மதுரை: மாநகரில் அரசரடி அருகே அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை, தென் மாவட்டங்களில் மிக பழமை வாய்ந்ததாகும். கடந்த 1865 ஆம் ஆண்டு இந்த சிறைச்சாலை அமைக்கப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்து வைக்க முடியும்.
தற்போது பாதுகாப்பு தொடர்பான வசதிகளை ஏற்படுத்தித்தர முடியாமல் சிறைத்துறை நிர்வாகம் கடும் இடர்பாட்டை சந்தித்துள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிக்கு சிறைச்சாலையை மாற்றம் செய்ய அதன் நிர்வாகம் கோரிக்கை வைத்து வந்தது.
அதனை ஏற்ற தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்டம் இடையபட்டி அருகே 100 ஏக்கர் இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான நில அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
குறிப்பாக புதிதாக கட்ட உள்ள சிறைச்சாலையில் கைதிகளின் அறைகள், நூலகங்கள், தொழிற்சாலைகள், பிரமாண்ட சமையல் கூடங்கள், காவலர் குடியிருப்புகள், காவலர் அங்காடி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இன்னும் ஓரிரு நாள்களுக்குள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தம் பணிகள் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மின்சார ரயில் விபத்து: ‘ப்ரேக்கிற்கு பதில் ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட்டேன்’ - ஓட்டுநர் விளக்கம்?