மதுரை: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய தென் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.
இதன் மூலம் ஏறக்குறைய 2 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைகின்றன. முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொடக்கத்தில் 152 அடி நீர் தேக்கப்பட்டு வந்த போது, தவறான பரப்புரையால் கடந்த 1979ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது.
அணையின் நீர்மட்டம்
இதை எதிர்த்து நடைபெற்ற 35 ஆண்டுக் கால சட்டப் போராட்டம் மற்றும் பல்வேறு வல்லுநர் குழுக்கள் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும் அணையைக் கண்காணிப்பதற்கு ஒன்றிய நீர்வள ஆணைய அமைப்பின் தலைவர் தலைமையில் மூவர் குழுவையும் நியமித்தது. அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டி அதன் உறுதித் தன்மையை நிரூபித்தது.
இதையடுத்து 2015ஆம் ஆண்டும் டிசம்பர் 7 மற்றும் 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி என மூன்று முறை 142 அடியை எட்டியது. ஆனால் முல்லைப் பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாகத் தொடர்ந்து தவறான கருத்துக்களைப் பரப்பியதோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
வடகிழக்கு பருவமழை
இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பெய்த கோடை மழை மற்றும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையினால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து காணப்பட்டது. அதனால் ஜூன் முதல் வாரத்தில் அணையிலிருந்து முதல் போகச் சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 136அடியைக் கடந்தது. இதனால் விரைவில் 142அடியை எட்டி விடும் சூழல் இருந்தும், கேரளாவைச் சேர்ந்த தனிநபர் தொடர்ந்த வழக்கால் அணையில் ரூல் கர்வ முறை அமல்படுத்தப்பட்டு 139.50அடியாகக் குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நவம்பர் 30ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142அடியாகத் தேக்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.
மதகுகள் திறப்பு
அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவிற்குள் தண்ணீர் வெளியேற்றப்பட்டன. தொடர்ந்து நீர்வரத்திற்கேற்ப மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவிற்குத் தண்ணீர் வெளியேற்றப்பட்ட போதிலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்தே காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று (நவ.30) அதிகாலை 3.55 மணியளவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142அடியை எட்டியுள்ளது. இதனால் வல்லக்கடவு, வண்டிப் பெரியாறு, சப்பாத்து, உப்புத்தர உள்ளிட்ட கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாற்றின் வழித்தடப் பகுதி மக்களுக்கு இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும் மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் 1682.46 கன அடி நீர் கேரளாவிற்குள் வெளியேற்றப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நான்காவது முறையாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142அடியை எட்டியுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கடும் பணிச்சுமை: மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரிக்கை