மதுரை: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர் சம்பள நிலுவை குறித்து தான் எழுதிய கடிதத்திற்கு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் பதில் அளித்துள்ளதாகவும், தான் 02.11.2021 அன்று கடிதம் எழுதியதற்கு, 11.04.2022 அன்று பதில் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பல இடங்களில் ஊதிய நிலுவை தரப்பட்டுவிட்டதாக அமைச்சர் பதிலளித்துள்ளார் என்றும், ஆனால் எல்லா இடங்களிலும் தரப்பட்டுவிட்டதா என்ற தகவல் அதில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது கடிதத்திற்குப் பதில் தருவதற்குள் மேலும் 6 மாத கால ஊதிய நிலுவை ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
அரசு நிறுவனமே தொழிலாளர்களை பட்டினி போட்டால், தனியார் நிறுவனங்கள் என்ன ஆட்டம் போடும் என கேள்வி எழுப்பிய அவர், பொதுத்துறை நிறுவனங்களில் தொழிலாளர் உரிமைகளையும், பயன்களையும் பந்தாட ஆரம்பித்துவிட்டார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். ஊழியர்கள் உழைப்புக்கான ஊதியத்தையே கேட்கிறார்கள் என்றும், ஆறு மாத கால நிலுவை என்றால் எப்படி வாழ்க்கையை நடத்துவது" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: பக்கிங்ஹாம் கால்வாயை அழகுபடுத்தும்போது நகரம் அழகாகும் - உயர் நீதிமன்றம்