ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் வேலை பார்த்துவந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்களைப் பதிவுசெய்யவில்லை. ஆகவே பதிவுசெய்யாத, தொழிலாளர்களுக்கு அரசின் உதவி முறையாகக் கிடைக்கப்பெறவில்லை.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டபோது பதிவுசெய்யப்படாத குடிபெயர்ந்த தொழிலாளர்களின் தகவல்களை வழங்குமாறு தெரிவித்தார்.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1600 தொழிலாளர்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இருப்பினும், நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக இருந்ததால் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
ஆகவே பதிவுசெய்யப்படாத ஒருங்கிணைக்கப்படாத குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு காணொலி மூலமாக விசாரணை நடத்தியது. அப்போது, அரசுத் தரப்பில், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், "இவ்வளவு நாளாக குடிபெயர்ந்த தொழிலாளர்களைப் பணிக்காகப் பயன்படுத்திவிட்டு, இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
குடிபெயர்ந்த தொழிலாளர்கள் செல்ல மறுக்கும் நிலையில், தமிழ்நாடு அவர்களைக் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் வந்தவர்களை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது மேடைப்பேச்சில் மட்டுமே இருக்கும்" எனக் கருத்து தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள பதிவுசெய்யப்படாத, குடிபெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தொழிலாளர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு - குடிபெயர்ந்தோரை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த அமைச்சர்