உத்தமப்பாளையத்தை சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ கரோனா பரவல் தொடரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது மாணவர்களுக்கு எதிர் விளைவையே ஏற்படுத்தும். கல்லூரிகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவ மாணவிகளும் பயில்கின்றனர். இதனால் அவர்களிடமிருந்து பொதுமக்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. மேலும், சில கல்வி நிலையங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் ” எனக் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, “ நீதிபதிகளே கரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பின்னர் திறக்கலாம் என்பது நீதிமன்றத்தின் கருத்து. அருகில் உள்ள மாநிலங்களின் நிலைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதில் முடிவு எடுக்க வேண்டும்.
அரசுத்தரப்பில் பேசிய வழக்கறிஞர், பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டதில், பெரும்பாலானவர்கள் இப்போது திறக்க வேண்டாம் என்றே கூறியுள்ளதாகத் தெரிவித்தார். எனவே, இது குறித்து அரசு ஆய்ந்து முடிவு அறிவிக்கும் என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 20 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: நவ. 30 வரை மெரினா திறக்க வாய்ப்பு இல்லை - அரசு தகவல்