மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் சகாயம் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ், அரசியலில் ஈடுபடப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இச்சூழலில் மக்கள் பாதை அமைப்பின் முக்கிய நிர்வாகிகளோடு கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். கட்சி ஆரம்பிப்பதற்கான தொடக்கப் பணிகளில் இறங்கி இருப்பதாகவும், வெகு விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வேளையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சகாயம் ஐஏஎஸ் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்றும், குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியில் களம் இறங்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பரிசீலனை செய்யப்பட்டபோது கூட, அவரது தேர்வு மதுரை ஆகவே உள்ளது என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் நடைபெற்ற கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வருவதில் மிகப் பெரும் பங்காற்றியவர் சகாயம் ஐஏஎஸ். இவர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தபோது தனது நேர்மையான செயல்பாடுகளால் மக்களின் அன்பையும் வரவேற்பையும் பெற்றவர்.
அந்த வகையில், இன்றைக்கும் சகாயம் ஐஏஎஸ்சுக்கு மதுரையில் கணிசமான ஆதரவு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.