கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மே 24ஆம் தேதி காலை இந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளையும் தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே.16) கட்டுப்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் வெயில், மழை என்று பாராது காவல் துறையினர் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை, கோரிப்பாளையம் தேவர் சிலை அருகில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்களை போக்குவரத்து காவல் துறையினர் நூதன முறையில் கண்டித்து அனுப்பினர்.
மேலும், வெளியே சுற்றும் நபர்கள் கையில் ரோஜாப்பூவைக் கொடுத்து, "ராஜா போல வாழ வேண்டும் என்றால் வீட்டிலேயே இரு, வெளியே சுற்றாதே" என்று அறிவுரை கூறி, அவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையின் இந்த நூதன விழிப்புணர்வுப் பணி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.