மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்த விரக்தியில் பணம் செலுத்தாமல் சென்ற திருச்சியை சேர்ந்த சசிகுமார் வாகனத்தை, சுங்கச்சாவடி ஊழியர்கள் துரத்திச் சென்றனர். இதனால், ஆத்திரமடைந்த சசிகுமார் உட்பட 4 பேர், ஊழியர்களைத் தாக்கினர்.
இதில் சுங்கச்சாவடி ஊழியர் மூன்று பேர் காயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அனைவரும் ஒன்றுகூடி வாகனத்தில் வந்தவர்களை நோக்கிச் சென்றதால், சசிகுமாருடன் வந்தவர்கள் வாகனத்தை எடுத்து விரைந்தனர். இதில் சசிகுமார் வாகனத்தில் ஏறாததால் தப்பிக்க முற்பட்டு கை துப்பாக்கிகளை வைத்து நான்கு முறை சுங்கச்சாவடியின் கூரையை நோக்கிச் சுட்டுள்ளார்.
பின்னர் நெடுஞ்சாலை அருகில் உள்ள முட்புதர்கள் வழியே சசிகுமார் தப்பி ஓடியுள்ளார். ஊழியர்கள் அனைவரும் ஒன்றுகூடி சசிகுமாரைத் துரத்திச் சென்று கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அருண்குமார், திருமங்கலம் வட்டாச்சியர் முருகேசன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சுங்கச் சாவடி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
திருமங்கலம் காவல்துறையினர், திருச்சியை சேர்ந்த சசிகுமாரிடம் விசாரணை செய்ததில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 5 பேரும் திருநெல்வேலி நீதிமன்றத்தில் குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு திரும்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய 4 பேரை மதுரை உசிலம்பட்டி ஆலாத்தூர் விளக்கு அருகே காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சென்னை மற்றும் அரியலூரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.