மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள பதினெட்டான்குடி கிராமத்தைச்சேர்ந்த மாணவர், லோகேஷ்வர். சிவக்குமார்-தவமணி ஆகியோரின் புதல்வரான இவர், 12ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றவர். தொடர்ந்து, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு அவர் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பாக அவருக்கு தேர்வு அனுமதிச் சீட்டு (Hall Ticket) அனுப்பப்பட்டிருந்தது. அந்த அனுமதிச்சீட்டில் லோகேஷ்வருக்கான தேர்வு மையம் லட்சத்தீவில் ஒதுக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு, அதிர்ச்சியடைந்த மாணவர் லோகேஷ்வர், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனை தொடர்பு கொண்டு, தேர்வு மையத்தை மாற்றுவதற்கு உதவி கோரியிருந்தார்.
இதனையடுத்து, சு.வெங்கடேசன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தேசிய தேர்வு முகமை, மாணவர் லோகேஷ்வருக்கு மதுரை கீழக்குயில்குடியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்தது. இதனைத்தொடர்ந்து, இன்று (ஆக. 30) பிற்பகல் லோகேஷ்வர் தேர்வு எழுதினார்.
இதுகுறித்து, தொலைபேசி வழியாக ''ஈடிவி பாரத் தமிழ்நாடு''ஊடகத்திடம் பேசிய லோகேஷ்வர், "ஹால் டிக்கெட்டைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. நல்லவேளையாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் செல்பேசி எண் கிடைத்தது. ஆகையால், உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு முறையீடு செய்தேன்.
அவர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக எனக்கு மதுரையிலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டது. இன்று நான் சிறப்பாக தேர்வு எழுதினேன்" என்றார்.
இதனைத்தொடர்ந்து, மதுரை சந்திப்பு எதிரே உள்ள ராணி மங்கம்மாள் சத்திரத்தில் அமைந்துள்ள மக்களவை உறுப்பினரின் அலுவலகத்திற்கு தனது தந்தை சிவக்குமாருடன் சென்ற மாணவர் லோகேஷ்வர், சு.வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையமா?... ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்