மதுரை: மேலூர் அருகே இளைஞர் ஒருவர் கடந்த பிப்.14ஆம் தேதி காதலர் தினத்தன்று அவரது காதலி என்று கூறப்படும் 17 வயது சிறுமியுடன் தலைமறைவானார்.
இது குறித்து, மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாரளித்ததை தொடர்ந்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் , மார்ச் 3ஆம் தேதி சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில், அவரது வீட்டில் விட்டு அந்த இளைஞர் சென்று உள்ளார்.
சிறுமி உயிரிழப்பு
பின், சிறுமியை அவரது தாய் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 6) காலை உயிரிழந்தார்.
இது தொடர்பாக, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், " பிப்.14ஆம் தேதி முதல் சிறுமியை காணவில்லை என சிறுமியின் தாய் புகார் அளித்தார். மார்ச் 3 ஆம் தேதி, அந்த இளைஞர் சிறுமியை மோசமான நிலையில் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
எலி மருந்து
அந்த சிறுமி, காதலனுடன் ஈரோடில் வசித்து வந்துள்ளார். சிறுமியை தேடுவதை அடுத்து இருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எலி மருந்து உட்கொண்டதால் சிறுமியின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக செயல் இழந்து உடல்நிலை மோசமானதை அடுத்து சிறுமி திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. சிறுமியின் உடலில் எந்தவொரு காயமுமில்லை. கூட்டுப் பாலியல் பலாத்காரம் நடைபெறவில்லை என மருத்துவ அறிக்கையில் தெளிவாக உள்ளது. சிறுமியும், காதலனும் கணவன் மனைவியாக வாழ்ந்தது மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அவரை, வற்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்யவில்லை என அந்த இளைஞர் (காதலன்) தெரிவித்துள்ளார்.
தவறான கருத்துகள் கூடாது
சிறுமி வழக்கு தொடர்பாக தவறான கருத்துக்களையும், சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் யாரும் பகிரக் கூடாது, போக்சோ, கடத்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமி உயிரிழந்தால் கொலை முயற்சி கொலை வழக்காக மாற்றப்படும், சிறுமி விவகாரத்தில் உண்மை நிலையை பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறி உள்ளோம்" என்று கூறினார்.
மேலும், அப்பகுதியில் 500-க்கும் மேலான மக்கள் ஒரே இடத்தில் கூடி இருப்பதால் காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப்பேருந்து மீது சிலர் கல்வீசி மறியலில் ஈடுபட்டதில், பேருந்தில் பயணித்த திருநெல்வேலியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ICC Women's World Cup 2022: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா; அசத்திய பூஜா வஸ்த்ரகர்!