சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த செல்வராணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் "எனது கணவர் கணேசன் துணை வட்டாட்சியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
இவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். இந்த சிகிச்சை முடிந்த இரண்டு நாள்களில், கரோனா பரிசோதனை செய்யாமலேயே கரோனா தீவிர சிகிச்சை பிரிவிற்கு எனது கணவரை மாற்றினர்.
அடிப்படை வசதிகள்கூட செய்து தரலாமல், லட்சக்கணக்கில் பணம் கட்டும் படி கூறினார். இதனால், நாங்கள் அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறினோம். அப்படி மாற வேண்டும் என்றால் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கட்டிவிட்டு அழைத்து செல்லும்படி தெரிவித்தனர்.
அப்படி மொத்தமாக 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மிரட்டி பெற்றுக்கொண்டனர். ஆனால், 4 லட்சத்தி 69 ஆயிரத்தி 554 ரூபாய்க்கு மட்டுமே ரசீது கொடுத்தனர். இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த எனது கணவர் ஜனவரி 28 ஆம் தேதி உயிரிழந்தார்.
தமிழ்நாடு அரசு விதித்துள்ள கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று (ஏப். 9) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த வழக்கு குறித்து தேசிய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அதேபோல சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை சேர்மன்கள் விஜயகுமார், திவ்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ரூ. 8 லட்சம் வரை வசூலிக்கும் தனியார் மருத்துவமனை - அரசு நிர்ணயித்த கட்டணக் கொள்கை காற்றில் பறந்ததா ?