மதுரை: மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகத்திற்கு, மதுரை மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனியிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
தனிச்சிறப்பு மிக்க மதுரை மல்லிகை நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கு மேலாக இங்கு விற்பனை செய்யப்படுகிறது. மணம், தன்மை காரணமாக மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வர்த்தகம் உள்ளதால், மதுரையில் இருந்து விமானம் மூலமாக சிங்கப்பூர், மலேசியா, துபாய், உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) விநாயகர் சதுர்த்தி என்பதாலும் நாளை (செப்டம்பர் 1) முகூர்த்த நாள் என்பதாலும் மதுரை மல்லிகையின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூபாய் 1,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிற பூக்களின் விலை நிலவரம் பின்வருமாறு, சம்பங்கி ரூ.250, செவ்வந்தி ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.200, செண்டு மல்லி ரூ.80, பிச்சி ரூ.1,000, முல்லை ரூ.1,000 என விற்பனை செய்யப்படுகிறது.
விலையேற்றம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “அனைத்து பூக்களின் விலையும் கடுமையான விலையேற்றம் கண்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக இந்த விலை நிலவரம் ஓரிருநாள் நீடிக்கும்” என்றார்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக தயாராகும் மதுரை சிறைக் கைதிகளின் விதைப் பிள்ளையார்...