மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரம் சந்தோஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணி நியமனம் செய்வதற்காக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை ஜூலை மூன்றாம் தேதி அரசாணை வெளியிட்டது .
இந்த அரசாணையின்படி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை தேர்வு செய்வதற்கான பொறுப்பை தனியார் மனிதவள நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். இது ஏற்புடையது அல்ல. நாளிதழ்களில் வெளிப்படையாக இது குறித்து அறிவிப்பு வெளியிட்டு அனைவரும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் அடிப்படையில் தேர்வு நடைபெற வேண்டும். ஆனால் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தனியார் நிறுவனம் மூலம் அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் என்பது அரசியல் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது . மனுதாரர் தரப்பு கூறுகையில், “தனியார் மூலம் அரசாணைப்படி, 400 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “தற்போது வரை 118 மருத்துவர்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள், தனியார் மூலம் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம் செய்வதற்கு தற்போதைய நிலையை தொடர அனுமதித்தனர். மேலும் “இதற்கு மேல் பணி நியமனம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.