மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் என்பவர், தான் கண்டறிந்த 66 மூலிகைகளைக் கொண்ட நோய் எதிர்ப்பு சூரணத்தை, வைராலஜி துறை நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், இந்தச் சூரணம் மனிதர்களுக்கு வரும் அனைத்து வகையான நோய்களையும் எதிர்க்கக்கூடிய, குறிப்பாக கரோனா போன்ற வைரஸ் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் கொண்டது என்றும், இதனை பரிசோதித்து முடிவுகளை வெளியிட்டு அனைத்து மக்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று (அக்.15) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ”ஆண்டு தோறும் சித்த மருத்துவத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கும் சூழலில், அதில் முறையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா” எனக் கேள்வி எழுப்பியது.
இதற்கு, ”தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் அடிப்படையில்தான், கபசுரக் குடிநீர், கரோனா நோய்க்கான தடுப்பு மருந்தாக வழங்கப்பட்டு வருகிறது” என மத்திய அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, ”அப்படியெனில், கபசுரக் குடிநீரை கரோனாவிற்கான மருந்து என ஏன் இதுவரை அறிவிக்கவில்லை?” என்று கேள்வி கேட்ட நீதிபதிகளிடம், ”விதிமுறைகளின்படி முறையான ஆய்வுகள் நடத்திய பின்னரே முடிவுகள் அறிவிக்கப்படும்” என மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”எப்போது முதல் கபசுரக் குடிநீர் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது? எத்தனை நபர்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது? எத்தனை பேர் இதில் குணம் அடைந்துள்ளனர்? மருந்தைக் கண்டுபிடிக்க பல கோடி ரூபாயை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் மத்திய அரசு, இது போன்ற சித்த மருந்துகளையும் ஊக்குவிக்கலாமே” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
தொடர்ந்து, ”சித்த மருந்துகள் தொடர்பாக என்னென்ன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன?” என்பன குறித்தும் விரிவான பதில் மனுவை மத்திய அரசை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், எந்த ஆராய்ச்சியின் முடிவில் கபசுரக் குடிநீர் கரோனா தொற்றுக்கு மருந்தாக வழங்கப்படுகிறது என்பது தொடர்பாகவும் மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ள நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மண்ணில் மூடப்படும் வைகை ஆற்று படித்துறைகள்' - பொதுமக்கள் அதிர்ச்சி