மதுரை: தேனியை சேர்ந்த பகலவன், சேலத்தை சேர்ந்த அப்துல் காதர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்:
"கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று, கரூர் பெரிய காளிபாளையம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் பொதுமக்களிடம் தேர்தல் கருத்துகணிப்பு எடுத்து கொண்டு இருந்தோம். அந்தப் பகுதியில் கரூர் சட்டப்பேரவை அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த சிலர் எங்களிடம் இருந்த தொலைபேசி, கருத்துக்கணிப்பு படங்கள் போன்றவற்றை கைப்பற்றினர். அதில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பதிவு செய்திருந்தோம். ஆதலால் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே எங்கள் மீது அதிமுகவைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் நாங்கள் பொது மக்களிடையே சாதி வெறியை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்தோம் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டும் வகையில் பொது மக்களிடையே நடந்து கொண்டாதாகவும் கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வாங்கல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது முற்றிலும் பொய்யான புகார். எனவே இந்த வழக்கில் எங்களுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் " என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஏப்.17) நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் மனுதாரருக்கு ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, சம்பந்தப்பட்ட இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
மேலும் சம்பந்தப்பட்ட இருவரும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் தேர்தல் கருத்துகணிப்பு சம்பந்தமாக வேலை பார்ப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளனர். எனவே இவர்களை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொள்வதில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறி இருவருக்கும் முன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: தகனம்செய்யப்பட்ட விவேக்கின் உடல்