தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சியைச் சேர்ந்த ரேணுகாதேவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், "தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனி பகுதியில் பொது பயன்பாட்டுக்கான இடம் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் துளசி மாடம், நடைபாதை ஆகியவற்றை பொதுமக்கள் அமைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பூங்கா அமைப்பதற்கான பொது பயன்பாட்டுக்கான இடம் முறையாக பராமரிக்கவில்லை. இதை முறைப்படுத்தும் வகையில் பொதுமக்கள் இணைந்து துளசி மாடமும், நடைபாதையும் அமைத்துள்ளனர். இதை ஆக்கிரமிப்பாக கருத முடியாது எனக்கூறி அதற்குரிய புகைப்படங்களை தாக்கல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "பூங்காவுக்கான இடத்தை முறையாக பராமரிப்பது உள்ளாட்சிகளின் கடமை. அதை செய்ய தவறியதால், மரங்கள் நட்டு பொதுமக்களே பராமரித்து வருகின்றனர். பொதுமக்கள் யோகா போன்ற பயிற்சிகளை செய்வதற்காகவே துளசி மாடமும், நடைபாதையும் அமைத்துள்ளனர். எனவே, இதை ஆக்கிரமிப்பாக கருத முடியாது என்பதால் தாசில்தாரின் நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.