மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்வேந்தன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
'தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக கரூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் "வேளாளர்' என ஒரு ஆய்வுப் புத்தக வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற இருந்தது.
இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு மதுரை ஆதீனம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இதற்காக காவல் துறையிடம் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அக்டோபர் 24ஆம் தேதி காவல் துறையினர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்துவிட்டனர். மேலும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதிக்கக்கூடாது என ஈரோட்டைச் சேர்ந்த புதிய திராவிட கழகம் சார்பில் ஆட்சபேனை தெரிவித்துக் காவல் துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த கடிதத்தின் மீது விளக்கம் கேட்டு சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதியில்லை எனக் காவல் துறை தெரிவித்தது.
காவல்துறை வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, நவம்பர் 14ஆம் தேதி கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் "வேளாளர்" என்ற ஆய்வு புத்தகத்தை வெளியிட அனுமதி தரக் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்' எனத் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து கரூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:ஜவுளிக்கடை மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி