மதுரை: கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கொடைக்கானலைச் சுற்றியுள்ள பூண்டி, மன்னவனூர், கூக்கால், கிளாவரை, பழம்புத்தூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மலைப்பூண்டு பயிரிடப்படுகிறது.
2018ஆம் ஆண்டு மலை பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்க கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், அது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை 1857இல் வெளியிடப்பட்ட நாளிதழ் காட்டுரை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, தாமதமின்றி உடனடியாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
கொடைக்கானலில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு, பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து செலவே பெரும்தொகையாக உள்ளது.
விலங்குகள் கொன்று புதைப்பு - அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
அதோடு விளைவிக்கப்பட்ட பூண்டை பாதுகாப்பாக வைக்க கிடங்கு போன்ற வசதிகள் இல்லாத காரணத்தால் மழைகாலங்களில் பூண்டை பாதுகாக்க இயலாத நிலை உருவாகிறது. கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையங்களை அமைத்தால் அருகமை மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர்.
இதனால் விவசாயிகள் பயனடைவர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையத்தையும், கிடங்கு வசதியையும் அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வு வேளாண் விற்பனைத்துறை இயக்குநர் கூடுதல் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.