மதுரை: திருமலை நாயக்கர் மஹாலில் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் இன்று(ஜூலை 2) ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கலந்துகொண்டார்.
அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரமோகன், "மதுரை திருமலை நாயக்கர் மஹால் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. அத்துடன் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் ஒளி, ஒலி காட்சிக்கு ஏற்ற புதிய விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.
வரலாற்றுச் சின்னங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அவற்றைப் பாதுகாக்க வேண்டிய உணர்வு ஒவ்வொரிடமும் தேவை. கீழடி அருங்காட்சியகம் திறக்கும் பணி கரோனா தொற்றால் தாமதமாகிறது.
தமிழ்நாட்டில் பழமை வாய்ந்த இடங்களைப் பராமரிக்க தொல்லியல் ஆணையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மீனாட்சி அம்மன் கோயிலில் வீர வசந்த ராயர் மண்டபத்தைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகள் முடிய மூன்றாண்டுகள் ஆகலாம். அதன் பின்னரே குடமுழுக்கு நடைபெறும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்