மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ளது கீழடி. இங்கு தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியின் வாயிலாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் இங்கே கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாக கீழடியின் புகழ் பரவத் தொடங்கி இருப்பதால் தற்போது ஒரு பெரும் சுற்றுலாத்தலம் போல் அப்பகுதி காட்சி அளிக்கிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து கீழடி அகழாய்வு தளத்தை பார்வையிட்டு வருகின்றனர்.தொல்லியல் துறையின் சார்பாக அங்கு பணியாற்றும் அதன் அலுவலர்கள் கூறுகையில், தற்போது கீழடிப்பற்றி கேள்விப்பட்டு, வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கூட தமிழர்கள் பெருமளவில் வரத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து, அந்த எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் இருந்து கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்காக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
![Keezhadi Changing into tourist palce Sivaganagai public coming to visit கீழடி சுற்றுலா தளமாக மாறுகிறது சிவகங்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-keezhadi-tourism-spot-script-9025391_26092019125546_2609f_1569482746_235.jpg)
எனவே இங்கே நாங்கள் வைத்துள்ள வருகைப் பதிவேட்டில் குறைந்தபட்சம் நாள்தோறும் 2000 பேர் கையொப்பமிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, கீழடியை பார்வையிடுவதற்காக வந்த பார்வையாளர் இத்தீரேஸ் கூறுகையில், நமது தமிழ் முன்னோர்கள் வாழ்ந்த இந்த இடத்தை பார்வையிடுவது மிகப் பெருமையாக உள்ளதாகவும் தொழிற்சாலை உள்ளிட்ட அமைப்புகளோடு இங்குள்ள கட்டுமானங்கள் வியப்பைத் தருவதாகவும் இருகின்றது.
அதேபோன்று அவர்களது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையும் சிறப்பானதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டிடங்கள் கட்டி வாய்க்கால்கள் வெட்டி மிக உயர்ந்த நாகரிகத்தோடு வாழ்ந்துள்ளது பார்க்கும்போது பெருமிதம் ஏற்படுகிறது. ஆகையால் இந்த இடத்தை ஒவ்வொரு தமிழரும் வந்து பார்வையிட வேண்டும் இதன் பெருமையை உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் வனிதா மாலதி கூறுகையில், மதுரையை ஒட்டியே மிகப்பெரும் அகழாய்வுக் களம் இருப்பது பெருமையாக உள்ளது. இங்கு வந்து பார்த்த பிறகுதான் இங்கு உள்ள மக்கள் எவ்வளவு செழிப்புடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.
அவர்கள் வாழ்ந்த மிச்சத்தை தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இங்கு உள்ள கால்வாய் போன்ற அமைப்புகள் மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள் அவற்றை எல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது அனைவரும் வந்து பார்வையிட வேண்டும் என தெரிவித்தார்.