தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக கீழடி ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மேற்கண்ட நான்கு இடங்களில் மணலூரில் மட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் இரண்டாம் கட்ட ஆய்வின்போது மிக நீண்ட செங்கல் கட்டுமான அமைப்பு கண்டறியப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஐந்தாம் கட்ட அகழாய்விலும் கண்டறியப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் ஆறாம் கட்ட அகழாய்விலும் அதேபோன்றதொரு கட்டுமான அமைப்பு இங்குள்ள பணியாளர்களால் கண்டறியப்பட்டுவருகிறது.
கொந்தகையில் கொத்துக்கொத்தாய் முதுமக்கள் தாழிகள்- பரபரப்பை ஏற்படுத்தும் கீழடி
கீழடி அகழாய்வில் மாநில அரசின் தொல்லியல் துறை சார்பாக 9 குழிகள் அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது மூன்று குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த களத்தில் மட்டும் தொல்லியல் துறை மாணவ மாணவியர் நான்கு பேர் உட்பட 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.