கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பாஸ்துரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "எனது மகன் சிவராம பெருமாள் மருத்துவத்துறையில் பட்டம் பெற்று சமூக சேவை செய்து வந்தார். 2016ஆம் ஆண்டு விஜய் ஆனந்த் என்பவர் எனது மகன் மீது பொய்யான புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்த நிலையிலும், விஜய் ஆனந்த் தூண்டுதலின் பெயரில் காவல்துறையினர் எனது மகனுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தனர்.
குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் எனது மகன் அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விஜய் ஆனந்த், காவல்துறையினருடன் வழிமறித்து தகாத வார்த்தைகளால் பொது இடத்தில் வைத்து திட்டியுள்ளனர். இதனால் எனது மகன் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி 2020ஆம் அக்டோபர் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
தனது தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதனடிப்படையில் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர்கள் குறிப்பிடாமலே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது மருமகளுக்கும் மிரட்டல் விடுக்கப்படுவருகிறது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே எனது மகனின் தற்கொலை குறித்த வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை நேற்று (மார்ச் 31) விசாரித்த நீதிபதி இளந்திரையன் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தொழிலாளியை கடுமையாகத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்!