மக்கள் நீதி மையத் தலைவர் கமல் ஹாசன், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை மதுரையில் நேற்று தொடங்கிய நிலையில், சிறு குறு தொழில் முனைவோர் மற்றும் வழக்கறிஞர்களை இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன், ” டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து எங்கள் கட்சி பிரதிநிதிகளும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அதேவேளையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் கூடாது என்பது மடமையான செயலாகும். 50 கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளதென்றால், 5 லட்சம் சிறு குறு தொழில்களை உருவாக்கி அதனை சமப்படுத்த வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தலில் நானும் போட்டியிடுகிறேன். தொகுதி எது என்பது பற்றி பின்னர் அறிவிப்பேன். கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதனை வெளியே சொல்ல முடியாது. நான் நாத்திகவாதி அல்ல, பகுத்தறிவுவாதி.
சினிமாவிலேயே நானும் ரஜினியும் போட்டியாளர்களாக இருந்ததில்லை. அரசியலில் ரஜினி போன்று எங்களுக்கும் தனி வழிதான். பாஜக ரஜினியை வைத்து சினிமா எடுப்பதற்காக ஆறு மாத கால்ஷீட் வாங்கி இருப்பார்கள் என எண்ணுகிறேன். எம்ஜிஆர் நானும் நடிகர்கள்தான். அமைச்சர்களுக்கு எனக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து தூக்கம் வரவில்லை. நான் பதவி ஏற்றால் எம்ஜிஆரின் பெயரை சொல்லித்தான் பொறுப்பேற்பேன்.
தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை அறிவிக்க வாக்குறுதி அளித்துள்ளோம். அதை நிச்சயம் நிறைவேற்றுவோம். மக்கள் நீதி மையம் அரசியலுக்கு வந்ததே ஆள்வதற்காகத் தான். நாங்கள் மகாத்மா காந்தியின் ’பி’ டீம் “ என்றார்.
இதனைத்தொடர்ந்து மதுரையிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில், கமல் ஹாசன் வாகனத்தில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். ஆனால், அவருக்கு எந்த இடத்திலும் பேச அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அங்கன்வாடி மைய அலுவலகத்தை தொடங்கிவைத்த ஸ்டாலின்