மதுரை - கன்னியாகுமரி செல்லும் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது கூத்தியார்குண்டு கிராமம். நிலையூர் கண்மாயின் கீழ்ப்புறத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் வாழையும் நெல்லும் தான் பிரதான விவசாயம். இங்கு உள்ள பெரும்பாலான விவசாயிகள் மண்ணை நம்பி பிழைக்கின்றவர்கள். ஆனால், பயிரிட்ட நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை, அதையும் மீறி அறுவடைக்கு தயாரானால் மழையால் பாதிப்பு, இப்படி வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு லாபம் என்னவோ எப்போதும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.
இப்போதும் இதே புலம்பல் தான். வாழை சாகுபடி பருவத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கும் இந்த கிராமம் தற்போது ஊரடங்கு காரணமாக தனது தொழில் வாய்ப்பை இழந்து சோகத்துடன் காணப்படுகிறது. வாழைப்பழம், வாழைக்காய், இலை, தண்டு, பூ ஆகியவற்றில் மதுரை மக்களின் தேவையை ஓரளவு கூத்தியார்குண்டு கிராமமே பூர்த்தி செய்து விடும். ஆனால் தற்போது இந்த கிராமத்தாரின் வாழ்வாதாரமே பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளது.
இதுகுறித்து விவசாயி சோலைமலை கூறுகையில், "எங்கள் கிராமத்தின் பிரதான விவசாயமான வாழையும் நெல்லும் தற்போது மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஏறக்குறைய 200 ஏக்கரில் வாழையை மட்டும் பயிர் செய்துள்ளோம். விளைந்து பருவத்திற்கு வந்துள்ள நேரத்தில் முற்றிலுமாக நஷ்டப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம். சராசரியாக ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்கிறார்.
இது குறித்து வார்டு உறுப்பினர் வடிவேலன் கூறுகையில், "நாளொன்றுக்கு சராசரியாக வாழை கட்டுகள் ஆயிரம் எண்ணிக்கையில் மதுரை சந்தைக்கு செல்லும் வருமானமாக ஒவ்வொரு வாரமும் சராசரியாக 7ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் கிடைத்து வந்தது. இதுநாள் வரை மிகச்சரியாக சென்று கொண்டிருந்த இந்த விவசாயம் தற்போதைய ஊரடங்கு உத்தரவு காரணமாக முற்றிலும் முடங்கி உள்ளது.
வாழ்வா, சாவா என்ற விளிம்பு நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது அரசு தருகின்ற ஆயிரம் ரூபாய் நிதியை வைத்துக் கொண்டு எப்படி அவர்கள் வாழ முடியும்? இங்குள்ள விவசாயிகளுக்கு வேளாண்துறை தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது விளைந்துள்ள முழு வாழையை அவர்களே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வாழ்வு தர வேண்டும்." என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
திருமணம், சடங்கு, கோயில் காதுகுத்து உள்ளிட்ட விழாக்களில் வாழை இலையின் தேவை மிக அதிகம். ஊரடங்கால் அவை எல்லாமே முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தோப்புகளில் வாழை மரத்திலிருந்து இலைகளையும் வாழைக் குலைகளையும் அறுக்காமல் அப்படியே போட்டு வைத்துள்ளனர். பெரும்பாலான தோப்புகளில் வாழைகள் சாய்ந்து கீழே விழுந்து கிடப்பதைக் காணமுடிகிறது.
மற்றொரு வாழை விவசாயியான குருமூர்த்தி கூறுகையில், "தற்போதைய சூழலில் ஹோட்டல்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இலைகளை பயன்படுத்த அரசு அறிவுறுத்தினால் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிக்கும் அது உறுதுணையாக இருக்கும். வாழைக்காய்களை அரசே கொள்முதல் செய்து அனைத்து மக்களுக்கும் வழங்க வழி செய்யலாம். 750 ரூபாய்க்கு விற்க கூடிய வாழைத்தாரை ரூபாய் 100 க்கு எடுத்துச் சென்றால் கூட ஏற்புடையது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சார்பாக இதுவரை எந்த அலுவலர்களும் தங்களை தொடர்பு கொள்ளவே இல்லை" என்றார்
அரசாங்கம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவ முன்வர வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் அவர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்பது அவர்களின் அச்சமாக உள்ளது.