கேரளா உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதிலும், கோழிக்கறிச் சந்தை மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி மாரியப்பன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
பரவல் நோய்கள் தமிழ்நாட்டில் பரவுமா? விளக்கும் விஞ்ஞானி!
அதில், “தமிழ்நாட்டை மிரட்டக்கூடிய வெவ்வேறு விதமான நோய்கள் இருந்தாலும், அதன் தாக்கம் இங்கே கூடுதலாகவில்லை. கரோனா வைரஸ் தொற்று பரவி ஓராண்டு நிறைவுறும் தருவாயில், அதன் தாக்கம் மிக மிகக் குறைந்த அளவில்தான் இருக்கிறதால் இறப்பு விகிதமும் மிகக் குறைவு. மேலும் குணமடைவோரின் எண்ணிக்கையும் 98 விழுக்காடாக உள்ளது. இதே நிலை ஒட்டு மொத்த இந்தியாவிலும் உள்ளது.
இதற்கு காரணம் நமது உணவுப் பழக்க வழக்கம். உடலின் நோய் எதிர்ப்பாற்றல் நன்றாக இருக்கின்ற காரணத்தால், மேலை நாடுகளில் ஏற்பட்டது போன்ற இழப்புகள் இங்கே நிகழ்வில்லை. தற்போது கரோனா தடுப்பு மருந்தும் தயாராகிவிட்டதால், மக்கள் இனியும் பீதியடைய வேண்டிய அவசியமில்லை.
பறவை காய்ச்சல் பரவல்: மாமிசம் சாப்பிடலாமா? விளக்கும் விஞ்ஞானி!
ஏவியன் இன்ஃபுளுயன்ஸா என்று அழைக்கப்படுகின்ற பறவைக் காய்ச்சல், ஹெச்5என்1 என்ற வைரஸ் மூலமாகப் பரவுகின்றது. இது பறவைகளுக்குள் பரவி, அவை கொத்துக் கொத்தாய் இறந்த நிலையில் காணப்பட்டன. கேரளா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் குறித்து கூடுதலாக அறியப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிக்கை அளித்துள்ளது. பிற வைரஸ்களைப் போன்று இது நேரடியாக மனிதர்களைத் தாக்கக்கூடியது அல்ல.
மேலும், இந்த வைரஸ் மைக்ரேட்டரி பேர்ட்ஸ் என்று சொல்லப்படுகின்ற வலசைப் பறவைகள் மூலமே நம் நாட்டிற்குள் நுழைகிறது. குறிப்பாக பறவைகளின் சரணாலயங்கள், இதுபோன்ற பறவைகள் வந்து செல்லக்கூடிய பகுதிகளில்தான் இந்த வைரஸ் வருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பறவைகள் நிறைய இறக்கின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளை உண்ணுகின்ற அசைவப் பிரியர்களுக்கு இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தாத வண்ணம், இறைச்சிகளை அதிக கொதிநிலையில் வேகவைத்து, சமைத்து சாப்பிட வேண்டும். அதன் மூலம் நோயை உண்டு பண்ணும் வைரஸ்கள் இறந்துவிடுகின்றன. ஆகையால் கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சி குறித்து எழும் வதந்திகளை கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பொதுமக்கள் நம்பத் தேவையில்லை.
மழைக்கால நோய்களை எப்படி விரட்டலாம்? விளக்கும் விஞ்ஞானி!
தமிழ்நாட்டில் பாரம்பரியமாகவே உணவுப் பழக்க வழக்கம் மிகச் சிறப்புடன் பேணப்படுகின்ற காரணத்தால், பறவைக் காய்ச்சல் போன்ற வைரஸ்கள் இங்கு பரவ வாய்ப்பில்லை. நமது மக்கள் தங்களுடைய உணவில் ஒருவேளையாவது பூண்டு, மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றைக் கொண்ட ரஸத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இது ஆகச்சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை நமக்குத் தருகிறது. இவை நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
இதுபோன்ற உணவு முறைகளை பின்பற்றாத மாநிலங்களும் இதனைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், எந்தவிதமான வைரஸ் நோய்களும் தாக்குவதற்கு வாய்ப்பு உருவாகாது. அசைவ உணவை அதிகம் உண்ணக்கூடிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் உணவுப் பழக்க மாற்றத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றலை அவர்கள் கூடுதலாகப் பெற முடியும் என்பது எனது நம்பிக்கை.
மழைக்காலங்களில் வரக்கூடிய மஞ்சள் காமாலை, எலிக்காய்ச்சல், டெங்கு, டைபாய்டு போன்றவற்றையும் விரட்டியடிக்க உணவுப் பழக்க வழக்க மாற்றமே சிறந்த மருந்தாக அமையும். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். ஆகையால், தற்போது புதிது புதிதாக வருகின்ற நோய்கள் குறித்து பொதுமக்கள் பெரிதும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க...போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு!