மதுரை: மதுரையில் உள்ள ஒரு தனியார் ஐஏஎஸ் அகடாமி அமைப்பின் விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் சகாயம், நேற்று (ஏப். 24) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் படித்த 90 லட்சம் இளைஞர்கள், வேலைவாய்ப்புக்காக தங்களை பதிவு செய்து வைத்து காத்திருக்கின்றனர்.
அப்படி ஒரு சூழல் நிலவும்போது, வடநாட்டிலிருந்து வரக்கூடிய இளைஞர்கள் போலியாக சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர்வது நம்முடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கின்ற செயலாகும். இதுபோன்ற விஷயங்களில் தமிழ்நாடு அரசு தலையிட்டு தவறுகளை, முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வு கூடாது: மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது கிராமப்புறங்களில் இருந்தும் நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய எளிய பின்புலத்திலிருந்து வரக்கூடிய மாணவர்களுக்கும் மிகக் கடினமான ஒன்றாகும். மேலும், எல்லா சூழல்களிலும் நுழைவுத்தேர்வை தவிர்ப்பதுதான் சரியானதாக இருக்கும். எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்பை அது பறிக்கிறது என்பதில் நான் உடன்படுகிறேன்.
நான் அரசியல் கட்சி எதுவும் தொடங்கவில்லை. நான் பொறுப்பிலிருந்தபோது ஏழாண்டு காலம் எந்தவித அதிகாரமுமற்ற பதவியில் அமர்த்தப்பட்டேன். அரசு நிர்வாகத்தில் முழு நேர்மையோடு பணியாற்றுபவர்கள் நீடிக்க முடியாது என்று முடிவெடுத்து பணி விலகத் தீர்மானித்தேன்.
அரசியலுக்கு திரை நட்சத்திரங்கள் அழைப்பு...: ஆனால், அன்றைக்கு எனது முடிவெல்லாம் அரசியலை நோக்கி ஒருபோதும் இல்லை. ஊழலை எதிர்ப்பவர்கள் இனி இந்த அரசு நிர்வாகத்தில் தொடர முடியாது என்கின்ற முடிவுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டேன். ஆனாலும், எனது குடும்பச்சூழல் காரணமாக தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டிய நிலை இருந்தது.
அரசியல் முடிவாக நான் எடுத்திருந்தால் பிரபல திரை நட்சத்திரங்கள் அழைத்தபோதே நான் சென்றிருப்பேன். மக்களிடையே சென்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. என்னோடு பயணித்த இளைஞர்கள் தேர்தல் களத்தில் நிற்க விரும்பினார்கள்.
அரசியலில் நீடிக்க முடியாது: அதனால் அதற்கு ஒப்புதலளித்து 16 நபர்களை போட்டியிட அனுமதித்தேன். அவர்களுக்கு ஆதரவாக சிறிய அளவில் பரப்புரை மேற்கொண்டேன். ஊழல் செய்யவும், ஓட்டுக்கு பணம் வழங்கவும் வாய்ப்புள்ளவர்கள் மட்டுமே அரசியலில் நிற்க முடியும். அதை ஒருபோதும் எங்களால் செய்ய இயலாது. ஊழல் செய்பவர்கள், மக்களுக்கு ஒட்டுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள்தான் அரசியலில் இருக்க முடியும் என்ற நிலைதான் உள்ளது.
'தமிழனாய் எதிர்பார்க்கிறேன்': தமிழ், இனம், மொழி மேம்பாடு, ஈழ விடுதலை, தமிழ் தேசியத்தின் எழுச்சி, மாநில சுயாட்சி, மத வெறியைத் தூண்டி நாட்டை பிளவுபடுத்தும் பாசிச சக்திகளுக்கு எதிராக, சகோதரத்துவ மனப்பாங்குள்ள, சாதி வெறியை அகற்ற தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு தமிழனாய் எதிர்பார்க்கிறேன், நம்புகிறேன்.
இன்றைய இளைஞர்களிடத்திலே அரசியல், சமூகம் உள்ளிட்ட விஷயங்களில் விழிப்புணர்வு போதவில்லை. இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது குறித்த வேதனையும் அக்கறையும் அவர்களுக்கு வேண்டும். அதைப்பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களிடத்தில் அதிகம் வேண்டும். அதைப் போன்றே நீக்கமற நிறைந்துள்ள ஊழல் குறித்தும் இளைஞர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
போதைப்பொருளை கட்டுப்படுத்தவும்: பள்ளிகளிலேயே மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவது, சட்ட ஒழுங்குக்கு முரணாகச் செயல்படுவது, ஆசிரியரையே அடிப்பது போன்ற சூழலும் நிலவுகிறது. இது வருத்துதற்குரிய ஒன்றாகும். தமிழ்நாடு அரசு கூடுதலாக கவனம் செலுத்தி மாணவர்களிடத்திலே உள்ள ஒழுங்கீனங்களை அகற்றி அவர்களை கட்டுப்பாடு, பொறுப்புடையவர்களாக மாற்ற வேண்டும்.
இந்தக் கடமை அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட சமூகத்திற்கும் உண்டு. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். பெற்றோர், ஆசிரியர், அரசு ஆகிய ஒருங்கிணைந்த சமூகத்திற்கு இதன்மீது பொறுப்பு உண்டு' என்றார்.
இதையும் படிங்க: தொடரும் ’Pan India’ படங்களின் ஆதிக்கம்..! அழிகிறதா தமிழ் சினிமா..?