மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பகல் பொழுதில் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்ய தொடங்கியது.
பலத்த இடி மின்னலுடன் தொடர்ந்து பெய்த மழை இரவு 7 மணி வரை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தனர். மேலும் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. முழங்கால் அளவிற்கு தேங்கியிருந்த மழை நீரில் வாகனங்கள் நீந்தி சென்றன.
இன்று அட்சய திருதியை முன்னிட்டு மாலை வேளையில் தங்கநகைகள் வாங்குவதற்காக செல்ல திட்டமிருந்த பொதுமக்கள் பலரும் இந்த மழை காரணமாக வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.