மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நேற்று (ஏப். 7) மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் சாட்சியாக முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுநரான தலைமைக்காவலர் ஜெயசேகர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
'கதறல் சத்தம் கேட்டது': அப்போது ஜெயசேகர் கூறுகையில், "முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் பணியின்போது, போலீசை பகைத்துக் கொண்டால் எவனும் வெளியே போகக்கூடாது. அவர்களை அடித்து ஒழிக்க வேண்டும் பேசியதை கேட்டேன். அத்துடன் நான் காவல்துறை வாகனத்தின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, காவல் நிலையத்தின் உள்புறத்தில் இருந்து தொடர்ந்து கதறல் சத்தம் கேட்டகொண்டே இருந்தது.
மறுநாள் காலை பார்க்கும்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடல், ஆடையில் ரத்தம் இருந்தன" என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப். 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே, பிணை வழங்க கோரி முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்த பிணை மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் கொலை வழக்கு... ரகு கணேஷ் ஜாமீன் மனு ஒத்திவைப்பு...