திருச்சியில் சமூக நலத்துறையில் பணிபுரிந்து வரும் பூமணி. இவர் கரோனா தடுப்பு பணிக்கு செல்லவில்லை என்று கூறி பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் 10.4.2020-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பூமணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், "மனுதாரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் கரோனா தொற்று காலத்தில் எந்தப்பணியும் செய்யாமல் வீட்டில் இருந்து கொண்டே மாதம்தோறும் சம்பளத்தில் 50 விழுக்காட்டை பிழைப்பூதியமாக பெற்று வருகிறார்.
தவறு செய்யும் அலுவலர்கள், ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு உடனடியாக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அலுவலர்களின் மெத்தன போக்கால் பணியிடை நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு மாதம் தோறும் பெருந்தொகை பிழைப்பூதியமாக வழங்க வேண்டியுள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தால் அரசு பணம் வீணாவதை தடுக்க முடியும். இந்த வழக்கில் மனுதாரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகிறது.
இதுவரை அவருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கவில்லை. இந்த தாமதம் குறித்து திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் செப்டம்பர் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.