மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அரசு மதுக்கடை புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி மணிபல்லம் செல்லும் சாலைக்கு மாற்றப்பட்டது.
இந்தக் கடையிலிருந்து 10 மீட்டர் தொலைவில் சமூக காடுகள் உள்ளன. மதுக்கடையின் அருகிலேயே பார் ஒன்றும் முறையான உரிமம் இன்றி செயல்பட்டுவருகிறது. ராயன்பட்டி, செட்டிபட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் இந்தப் பகுதியைக் கடந்துசெல்ல வேண்டி உள்ள நிலையில், மதுக்கடையால் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஆகவே புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி மணிபல்லம் செல்லும் சாலையில் உள்ள மதுக்கடை செயல்பட இடைக்காலத் தடைவிதிப்பதோடு, கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, சமூக காடுகளுக்கு அருகே மதுக்கடை செயல்பட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் இல்லையா? எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வுசெய்து அறிக்கைத் தாக்கல்செய்யவும் உத்தரவிட்டனர். மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மாற்றுப்பாதை ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற வழக்கறிஞருக்கு ஓராண்டுத் தடை