மதுரையைச் சேர்ந்த அருளானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், கிண்ணிமங்கலத்தில் ஏகநாதர் கோயிலுக்கு சொந்தமான குருமண்டபம் ஒன்று உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஏகநாதர் குரு மண்டபம் வைகை நதி பாரம்பரியமான கீழடி அகழாய்வுடன் தொடர்புடையது.
ஏகநாதர் குரு மண்டபத்தில் பள்ளிப்படை வட்டெழுத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் சுமார் 2,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என ஆய்வில் தெரியவருகிறது. ஏகநாதர் குரு மண்டபத்தில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டால் சங்க காலத்து எழுத்துகளும் வரலாற்று சிற்பங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால் கிண்ணிமங்கலம் கிராமத்தில் ஏகநாதர் குரு மண்டபத்திற்கு சொந்தமான இடங்களை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஏகநாதர் குரு மண்டபம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகழாய்வுப் பணி நடத்த அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட கோயிலின் பகுதிகளை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆகவே, தமிழ்நாடு தொல்லியல் துறை முதன்மைச் செயலரும், தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை தலைவரும் கிண்ணிமங்கலம் பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர். தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை தலைவரே உரிய அலுவலராக இருப்பதால், கிண்ணிமங்கலத்தில் கிடைக்கப்பெற்றுள்ள கல்வெட்டில் உள்ள மொழி மற்றும் அதன் காலம் குறித்த விவரங்களையும் ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பேராசிரியர் செல்வகுமார், அகழ்வாராய்ச்சி அலுவலர் காந்திராஜன் ஆகியோர் மாணவர்களுடன் சென்று கிண்ணிமங்கலம், ஏகநாதர் குரு மண்டபம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து ஏப்ரல் 13இல் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க...'கமல் ஒரு அரை வேக்காடு' - செந்தில் பாலாஜி தாக்கு