மதுரை: தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடக்கோரி, ஈஷா யோகா மையம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தற்போதைய கரோனா காலத்தில் முக்கியமானது அல்ல எனக்கூறி நீதிபதிகள் மனுவின் மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஈஷா யோகா மையம் சார்பாக ஜெகதீஸ் வாசுதேவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனது வழக்கறிஞர் தினேஷ் ராஜா மூலம் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் வெளிப்புறத் தணிக்கை செய்ய வேண்டும். கோயில்களின் கட்டட அமைப்பையும், அதனுடன் தொடர்புடைய நிலப் புலங்கள் குறித்தும், கோயில்களின் அசையும் அசையா சொத்துக்கள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்தும், அவற்றின் வாடகை பாக்கி நிலவரங்கள் குறித்தும், கோயில்களில் வழக்கில் இருக்கும் சடங்குகளும் ஆன்மீக செய்முறைகளும் புழக்கத்தில் உள்ளனவா, மக்களிடமிருந்து காணிக்கையாக பெறப்படும் தொகையின் நிலவரம் குறித்தும், கோயில் சார்ந்த செலவுகள் குறித்தும் வல்லுநர்கள் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
வல்லுநர்களையும் ஆன்மிக வாதிகளையும் கொண்ட சிறப்புக் குழு அமைத்து, கோயில் நிர்வாகம், கோயில் சடங்கு சம்பிரதாயங்கள் முறையாய் கடைபிடிக்கபடுகின்றனவா என்று ஆய்வு செய்ய வேண்டும்" என தனது மனுவின் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன், இது தொடர்பாக மனுதாரர் ஏப்ரல் 20ஆம் தேதி அரசுக்கு மனு கொடுத்துள்ளார். ஏப்ரல் 26ஆம் தேதி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அரசு மனுவை பரிசீலனை செய்வதற்கு முன்பே நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இந்த வழக்கு முற்றிலும் விளம்பர நோக்கோடு பதிவு செய்யப்பட்ட வழக்கு. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய நீதிபதிகள், ”இந்த வழக்கு தற்போதைய சூழலில் அவசரமாக விசாரிக்கக் கூடியது கிடையாது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேரடியாக நடத்த வேண்டும். எனவே இந்த வழக்கை கரோனா தொற்று முடிந்த பின்பு விசாரணை செய்யலாம்” எனக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.