மதுரை: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல் நிலையத்தில் நான் உட்பட பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் நான் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
எனவே இந்த வழக்கில் காவல் துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன் பிணை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
முன்னதாக, திருமயம் அருகே, 2018ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி வழங்குவது தொடர்பான சம்பவத்தில், காவலர்களுக்கும் ஹெச். ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நீதிமன்றத்தைத் தரக்குறைவான வார்த்தையால் அவர் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.