மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியை அடுத்த புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வைரமுருகன்-சௌமியா தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் ஜனவரி 31ஆம் தேதி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் இந்தப் பெண் குழந்தை கடந்த மார்ச்2ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறி பெற்றோர் குழந்தையை வீட்டின் முன்பு புதைத்துள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்த நிலையில் புள்ளநேரி கிராம நிர்வாக அலுவலர் மந்தகாளை செக்காணூரணி காவல் நிலையில் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் குழந்தையின் பெற்றோர் வைரமுருகன், சௌமியா, தாத்தா சிங்கத்தேவர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 31 நாள்கள் ஆன பெண் சிசுவை பெற்றோர்கள் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான குழுவினர் புதைக்கப்பட்ட இடத்தில் குழந்தையை தோண்டி எடுத்து உடற்கூறு பரிசோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: 'யெஸ் பேங்க்', இனி 'நோ பேங்க்' - ராகுல் டிவீட்