மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள செய்தியாளர் அரங்கில் நேற்று (செப்.13) நடைபெற்ற ஆறு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பில், பியூசிஎல் அமைப்பின் மாநில செயலாளர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஜான் வின்சென்ட் பேசினார். அப்போது, 'நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் ஆறு பேர், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் இஸ்லாமிய கைதிகள், வீரப்பன் தொடர்புடைய வழக்கிலே சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது. பல்வேறு நீதிமன்றங்களின் முன் தீர்ப்புகளும் எடுத்துக்காட்டாக உள்ளன.
பல்வேறு அரசியல் உள்நோக்கம் காரணமாக இவர்கள் அனைவருக்கும் ஆன விடுதலை சாத்தியமாக இருந்தும் கூட தற்போது வரை விடுதலை செய்யப்படவில்லை. அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக தமிழக அரசு இதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்.9ஆம் தேதி அரசியல் சட்ட பிரிவு 161ன்படி தமிழகத்தை அப்போது ஆண்ட அதிமுக, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது. தமிழக ஆளுநர் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் இன்று வரை தமிழக ஆளுநர் அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். இவ்வாறு ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது தவறு என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி அரசியல் சட்ட பிரிவு 142ன் அடிப்படையில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைக்கு மனுதாரராக இருந்த பேரறிவாளன் வழக்கில் அவரை விடுதலை செய்தது.
ஒரே மாதிரியான ஒத்த பிரச்சனை உடைய ஒரு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அதேபோன்ற பிரச்சனையில் இருப்பவர்களுக்கு அந்தத் தீர்ப்பின் சாராம்சம் பொருந்தும். இதற்கு மாறாக மாநில அரசு, தொடர்புடையவர்களும் உச்ச நீதிமன்றம் சென்று தங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுவது நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிப்பது மட்டுமல்ல சாமானிய மனிதர்களை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குவதும் கூட.
ஆகையால், இந்த போக்கை கைவிட்டு மாநில அரசு தனக்குள்ள உரிமையை பயன்படுத்தி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். குறிப்பாக, அரசியல் சட்டப் பிரிவு 162, யை தங்களுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பயன்படுத்துவதோடு, ஒருவேளை ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவில்லை என்றால், அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டை மருத்துவ படிப்பில் பெறுவதற்கு தமிழக அரசு எவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டதோ, அதேபோன்று இப்போதுள்ள அரசும் நீண்ட நாட்கள் சிறையில் உள்ள நபர்களை விடுதலை செய்ய வேண்டும்.
கடந்தாண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. ஆனால் அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமை, வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் இழைத்தவர்களுக்கு அது பொருந்தாது என அதில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டு மதங்களுக்கு இடையே அல்லது இரண்டு பிரிவினர் கிடையே மோதலை உருவாக்குவது உள்ளிட்ட பிரிவுகளும் உள்ளன. அவையெல்லாம் அரசியல் கைதிகளுக்கும் பொருந்துவதாக உள்ளன. இந்த அடிப்படையில் தான் இஸ்லாமிய கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
பில்கிஸ் பானு வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்புடைய அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பில்கிஸ்பானு தனக்கு ஆபத்து இருக்கிறது என்று அச்சம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது ஏற்கத்தக்கதல்ல. தர்மபுரி கல்லூரி பேருந்து எரிக்கப்பட்ட வழக்கிலும், மதுரை மாவட்டம் மேலவளவு வழக்கிலே கைது செய்யப்பட்டவர்களும் லீலாவதி கொலை வழக்கில் கைதானவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த அடிப்படையில் நீண்ட காலம் சிறையில் உள்ள அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இதில் பங்கேற்றன.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயர் - தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!