மதுரை: தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட்ட சிறப்பு விரைவு ரயில்கள் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுரைக் கோட்ட அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மதுரை கோட்ட அலுவலகம்,
"தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 36-க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக சென்னை-மதுரை மார்க்கத்தில் இயக்கப்பட்ட பாண்டியன் சிறப்பு ரயில்களில், நவம்பர் 11ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 7,154 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம், 35 லட்சத்து 76 ஆயிரத்து 516 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில், மதுரை - சென்னை மார்க்கத்தில் இயக்கப்பட்ட, பாண்டியன் சிறப்பு விரைவு ரயில்களில் 6,083 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் 25 லட்சத்து 86 ஆயிரத்து 467 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அதே போல, தூத்துக்குடி-மைசூரு மார்க்கத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், 6,721 பயணிகள் (64%) பயணம் செய்ததில், 23 லட்சத்து 98 ஆயிரத்து 843 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாநகராட்சிப் பள்ளி மாணவியை நேரில் சென்று வாழ்த்திய மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்