கரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற மதுரை மல்லிகைப்பூ செடியிலேயே வாடும் நிலை ஏற்பட்டது. இதனால் மல்லிகைப்பூ விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மல்லிகைப்பூ விவசாய சங்க தலைவர் ராமச்சந்திரன் விவசாயிகளை காக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மதுரை மல்லிகை பூ திண்டுக்கல்லில் உள்ள நறுமண பொருள்கள் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திண்டுக்கல் நறுமண பொருள் ஆலையிலிருந்து வாகனம் கொண்டு வரப்பட்டு வலையங்குளம், பாரப்பத்தி, பரம்புப்பட்டி, எலியார்பத்தி ஆகிய இடங்களிலிருந்து மல்லிகைப்பூ ஏற்றிச் சென்றது. ஊரடங்கு உத்தரவு நீங்கும்வரை மல்லிகை பூ இதுபோல் ஏற்றுமதி செய்தால் மல்லிகைப்பூ விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மதுரை மல்லிகைப்பூ விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை என்றால்கூட விவசாய வேலை செய்ததற்கான கூலி கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.