மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக அங்கு நடைபெற்று வருகிறது. அதனை இன்று காலை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ”உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை வரும் 16 ஆம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளனர். போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை வரும் 11 ஆம் தேதி அவனியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் பதிவு செய்து கொள்ளலாம். மாடுபிடி வீரர்கள் 9 ஆம் தேதி பதிவு செய்ய வேண்டும்.
வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் உடல் தகுதி பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மணிக்கு 75 வீரர்கள் வீதம் மொத்தம் 8 சுற்றாக 300 வீரர்களுக்கு மிகாமல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும். பார்வையாளர்கள் தனி மனித இடைவெளியுடன், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் தான் அனுமதிக்கப்படுவர். கூட்டம் கூடாத வகையில் ஆங்காங்கே எல்.இ.டி. திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து காளைகளும் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு ஜல்லிக்கட்டில் களமிறங்கும் காளைகள் மற்றொரு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி இல்லை என விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: 5ஆம் உலகத்தமிழ் மாநாடு! - மதுரையின் கம்பீரமான நாற்பதாண்டு வரலாற்றுத் தடம்!