மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது, திருமலை நாயக்கர் அரண்மனை. இந்தோ - சரசானிக் கட்டடக்கலைப் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனை கி.பி. 1636ஆம் ஆண்டு திருமலை நாயக்கரால் கட்டப்பட்டதாகும். மிகப்பெரிய மாடங்களையும், நூற்றுக்கணக்கான பிரமாண்ட தூண்களையும் கொண்டு எழிலுடன் திகழ்கிறது. நான்கில் ஒரு பாகமாக எஞ்சியுள்ள, தற்போதுள்ள அரண்மனையில்தான் திருமலை மன்னர் ராஜ பரிபாலனம் நடத்தியதாகத் தகவல். இதன் உட்புறம் மிகப் பிரமாண்டமான நாடக சாலை உள்ளது. இங்கு தான் மன்னரும் அவரது குடும்பத்தாரும் மந்திரிகளும் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்துள்ளனர்.
மதுரை மாநகரில் மிக உயரமானதாகவும் அழகிய மாடங்களை கொண்டதாகவும் திகழ்கின்ற இந்த அரண்மனையில் பல்லாயிரக்கணக்கான புறாக்களும் வெளவால்களும் தங்களின் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்துவருகின்றன. அவற்றின் எச்சம்காரணமாக அரண்மனையின் பல்வேறு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால், சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கின்றனர் என தமிழ்நாடு தொல்லியல் துறை, சுற்றுலாத் துறை ஆகியவை இணைந்து ரூ. மூன்று கோடியே 60 லட்சம் செலவில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதில் ஒன்றாக புறாக்கள், வெளவால்களின் வருகையை தடுப்பதற்கு அரண்மனையின் நடுமுற்றத்தில் நைலான் வலை அமைத்து உள்ளதுடன், மாடங்களில் உள்ள துவாரங்களில் இரும்பு வலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறையின் இந்தச் செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நாணல் நண்பர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கூறுகையில், 'சுற்றுச்சூழலுக்கு பறவைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது சின்ன குழந்தைக்குக்கூட தெரியும், தமிழ்நாடு அரசுக்கு ஏன் தெரியாமல் போனது. மும்பையில் உள்ள 'கேட் வே ஆஃப் இந்தியா' பகுதியில் ஆயிரக்கணக்கான புறாக்களை காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அந்த மாநில அரசாங்கம் அப்பறவைகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், அதனைப் பாதுகாத்து வருகிறது. அதேபோன்று தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சார்மினார் அருகே நான்கு வழிச்சாலை ஒன்றை இரு வழிச்சாலையாக சுருக்கி மற்றொரு பகுதியை புறாக்களின் வாழ்விடப் பகுதியாக அந்த மாநில அரசாங்கம் பாதுகாத்து வருகிறது. அதுபோன்று திருமலை நாயக்கர் மஹாலில் வசித்து வரும் அந்தப் பறவைகளை தொந்தரவு செய்யாதவாறு ஏன் பாதுகாக்க முடியாது' எனக் கேள்வி எழுப்புகிறார்.
மதுரையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. மதுரை மரங்கள் அற்ற ஒரு நகரமாக மாறி விடுமோ என்ற அச்சத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்கிறார், மண்ணின் மரங்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த குபேந்திரன்.
மேலும், இது குறித்து குபேந்திரன் கூறுகையில், 'மதுரையில் மிக பகிரங்கமாகவே சூழலியல் படுகொலைகள் நடைபெற்றுவருகின்றன. 'பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான்' என்ற சொலவடை மாறி விமானம் கண்டுபிடித்த பிறகு பறவைகள் எதற்கு என்ற மனநிலைக்கு மாறி விட்டார்களோ என எண்ண சொல்லத் தோன்றுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக, இந்த மாடப்புறாக்களும் வெளவால்களும் அதிக அளவில் வாழ்கின்ற இடம் திருமலை நாயக்கர் அரண்மனை தான். அதனை ஒட்டுமொத்தமாக துரத்தி அடிக்கும் இந்த முயற்சி ஏற்கத்தக்கது அல்ல' என்றார்.
பறவைகளும் வெளவால்களும் எச்சமிடுகின்றன என்ற காரணத்தைக்காட்டி, அவற்றை நிராகரிப்பது மிக மிக தவறான முன்னுதாரணமாகும். பறவைகளை விரட்டியடிக்க செய்த செலவில் அவற்றைப் பாதுகாக்க மாற்று இடம் உருவாக்குவதன் மூலம் சரிசெய்து இருக்க முடியும் எனக் கூறுகிறார், மதுரை இயற்கை பேரவை அமைப்பாளர் ஸ்ரீதர் நெடுஞ்செழியன்.
மேலும் அவர் கூறுகையில், 'பறவைகள் குஞ்சுகளோடு வாழ வேண்டும் என்பதற்காக, ஊருக்குப் பொதுவான மின் சாதனப் பெட்டியை பயன்படுத்தாமல் ஒரு மாதம் முழுவதும் இருளில் வசித்த கிராமங்களும் இங்குதான் உள்ளன. சுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை தேசிய அளவில் 42ஆவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் இங்குள்ள மரங்களையும் வெட்டி, அதில் வாழ்கின்ற பறவைகளையும் விரட்டி ஆதாரமாய் திகழக்கூடிய திருமலை நாயக்கர் மஹால் மாடங்களில் பறவைகளை வாழ விடாமல் தடுத்தால், நகரின் பசுமை சூழல் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்பதை இந்த அரசு உணர வேண்டும்' என ஆவேசமாகத் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வரலாற்றுச்சிறப்புமிக்க இடமாகத் திகழும் திருமலை நாயக்கர் அரண்மனையின் அடையாளம் என்பது அதன் பிரமாண்டமான தூணிலோ, அங்கு உயர்ந்த மாடங்களிலோ அல்லது ஒவ்வொரு நாளும் இரவில் நடைபெறும், ஒளி-ஒலி காட்சிகளிலோ அல்ல. மாடப்புறாக்களும் வெளவால்களும் சூழ அவற்றின் சத்தத்தில் சுற்றிப் பார்க்கின்ற, அந்த சந்தோசத்தில் தான் இருக்கிறது என்கின்றனர், இயற்கை ஆர்வலர்கள்.
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, மயிலுக்குப் போர்வை தந்த பேகன் என பல வள்ளல் மாந்தர்கள் வாழ்ந்த பூமியில், நம்முடன் வாழ நினைக்கும் மாடப் புறாக்களின் வாழ்விடங்கள் பறிபோய் உள்ளது. இதற்குப் பதில் சொல்லுமா தமிழ்நாடு தொல்லியல் துறை?
இதையும் படிங்க...’விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும் பத்தமடைப் பாய்கள்’