மதுரை: வடக்கு சித்திரை தெருவில் உள்ள காட்டேஜ் எம்போரியம் என்ற கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பழங்கால சிலைகள் மற்றும் கலைபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு பெற்று சம்பவ இடத்தில் சிலை கடத்தல் பிரிவு தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது கடையின் மாடியில் ரகசியமாக பதுக்கி வைத்திருந்த 3 பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக சிவ பார்வதி சிலை, பெண் உருவ கல் சிலை, புத்தரின் தலை சிலை ஆகிய 3 பழங்கால உயர் மதிப்புள்ள சிலைகள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சார்பில் அளிக்கப்பட்ட தகவலின் படி,
”இந்த 3 சிலைகளும் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பால வம்சத்தைச் சேர்ந்தவர்கள் வழிபட்டதாக இருக்கலாம். சிலைகளை ஒடிசா, ஆந்திரா அல்லது மேற்கு வங்கம் மாநிலங்களில் உள்ள கோயில்களில் இருந்து திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட சிலைகளுக்கான ஆவணத்தை காட்டேஜ் எம்போரியம் உரிமையாளர் ஜாகூர் அகமது சர்கார் சமர்பிக்க தவறியதால் சிலைகளை பறிமுதல் செய்து, வேறு மாநில சிலைகள் தமிழ்நாட்டிற்கு வந்தது எப்படி என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். 3 சிலைகளும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா மற்றும் ஜெர்மன் நாட்டுக்கிடையேயான சட்டபூர்வமான பரஸ்பர ஒப்பந்தத்தில் சிக்கல்